செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்றும் , நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து வழக்கு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதி வாதங்களை முன்வைப்பதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தார். இதை எடுத்து விசாரணை ஜூலை 11 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராவார். இன்று செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களையும், நாளை அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா தனது தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளன அதனை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளார்.