நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மண்புழு உரம்,பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீன் அமிலம் போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்து, விற்பனை செய்திட இயற்கை வேளாண்மை இடுபொருள் மையம் நிறுவ, ஆர்வமுள்ள உழவர் குழுக்களுக்கு மானிய உதவியாக குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வீதம் 3 குழுக்களுக்கு ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.
சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல்விளக்க அலகாகப் பராமரிக்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான உறுதி மொழிப் பத்திரம் பயனாளிகளிடம் பெற்று கொள்ளப்படும். தேர்வு செய்யப்பட்ட பின் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியைத் தொடர வேண்டும். மானியம் பெறும் குழு திட்டக் கூறுகளை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
திட்டத்தில் பயன்பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியுடன் குழுவின் பெயர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழுவின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கையினை வருகிற ஆகஸ்ட் 10-க்குள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.