தமிழகத்தில் இந்த வருடம் முழுவதும் மழைக்காலம் போலவே சென்று கொண்டிருக்கிறது. தற்போது பருவ மழை காலம் கொஞ்சம், கொஞ்சமாக நெருங்கி வருகிறது. அண்டை மாநிலங்களில் பருவமழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்திலும் விரைவில் பருவமழை தொடங்க உள்ளது.
ஆனால் கத்தரி வெயில் அடிக்கும் சித்திரை மாதத்தில் கூட வெயிலின் தாக்கம் குறைந்து, மழையின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். இந்த நிலையில் தான், வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு பகுதிகளில் இயல்பிலிருந்து 2️ முதல் 3 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிகபட்ச ஈரப்பதம் காணப்படும்போது வெப்பத்தின் அழுத்தம் காரணமாக, அசௌகரியமான சூழல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைப்பொழிவு காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இன்று தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று ஒரு மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம். ஆகவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.