இந்தியா மட்டுமல்ல, தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தில் டீக்கு மிக முக்கிய இடமுண்டு. டீ போடாத வீடுகளோ டீ வடிகட்டி இல்லாத வீடுகளோ இருக்காது. ஆனால் பெரும்பாலான வீடுகளில் அவை கறை படிந்து கருமை நிறமாக, டீயின் விடாப்பிடியான கறையோடு தான் இருக்கும். அவற்றை எளிதாக எப்படி சுத்தம் செய்து கறைகளை நீக்கலாம் என்று தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
நீங்கள் உங்களுடைய வீடுகளில் எந்த வகை ஸ்டிடெயினரை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் மிக முக்கியம். சுத்தமான ஸ்டெயினரை பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எந்த வகையைப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். பொதுவாக நிறைய வீடுகளில் பிளாஸ்டிக் டீ ஃபில்டர்களையே அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது விலை மலிவாக இருப்பதே காரணம். ஆனால் பிளாஸ்டிக் ஸ்டெயினர்களை பயன்படுத்துவது தான் சிறந்தது. ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் வடிகட்டி பயன்படுத்தும் போது அது சூடாக வடிகட்டும்போது நரம்புகள் உருகவோ கட் ஆகி உங்களுடைய டீயில் கலக்கவோ வாய்ப்பு அதிகம்.
மிகக் குறைந்த அளவு மட்டுமே உங்களுடைய டீ ஸ்டெயினரில் கறைகள் இருக்கின்றன என்றால் அதற்கு இந்த எளிமையான முறையிலேயே இலகுவாக கறைகளைப் போக்கி விடலாம். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டிஸ்வாஷை சேர்த்து விட்டு அதிலேயே டீ வடிகட்டியையும் போட்டு விட்டு 5 நிமிடங்கள் வரை நன்றாகக் கொதிக்க விடுங்கள். பிறகு அதை ஓரமாக இறக்கி வைத்து விடுங்கள். தண்ணீர் ஆறியதும் ஸ்டெயினரை எடுத்து ஸ்கிரப்பரால் நன்குத் தேய்த்துக் கழுவுங்கள். வடிகட்டியில் உள்ள கறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். தேவைப்பட்டால் கொதிக்கும் நீரில் சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடா காலங்காலமாக பல்வேறு க்ளீனிங் விஷயங்களுக்காக பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. வீட்டை சுத்தம் செய்வது முதல் துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், சமையலறை பாத்திரங்கள் ஆகியவற்றைச் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் பொருளாக இந்த பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவும் 4 ஸ்பூன் வெதுவெதுப்பான நீரும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அந்த பௌலுக்குள் நீங்கள் சுத்தம் செய்ய வேண்டிய டீ வடிகட்டியைப் போட்டு 5-6 மணி நேரம் வரை ஊறவிடுங்கள். பின்பு ஒரு டூத் பிரஷ்ஷை எடுத்து நன்கு தேய்த்து விட்டு சுத்தமான நீரில் கழுவுங்கள். கறைகள் முழுவதுமாக நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.
மிக வேகமாக உங்கள் டீ வடிகட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு இந்த சூப்பர் டிப்ஸ் உதவும். ஒரு பௌலில் உங்களுடைய வீட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ப்ளீச்சிங் லிக்விட்டை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலந்து கொள்ளுங்கள். மணிக்கணக்கிலோ இரவு முழுவதுமோ ஊறவைக்கத் தேவையில்லை. 5-10 நிமிடங்கள் ஊறவைத்தாலே போதுமானது. அதன்பிறகு வெளியே எடுத்து ஒரு டூத் பிரஷ்ஷால் நன்கு தேய்த்து கழுவுங்கள். உங்களுடைய டீ வடிகட்டியில் உள்ள கறைகள் முழுமையாக நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.
வடிகட்டியை கையில் பிடித்துக்கொண்டு அதன் மீது கொதிக்கும் நீரை ஊற்றவும். பின் ஒரு பிரஷ்ஷால் மெல்ல, துவாரங்களில் ஒட்டியிருக்கும் இலைகளை நீக்கவும். நல்ல பலன் தரும் முறை இது. பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் சோப்பை கொஞ்சம் எடுத்து ஒரு பௌலில் போடவும். பின் அதன் மீது வெது வெதுப்பான நீரை, வடிகட்டி முழுகும் அளவுக்கு ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அந்த கரைசலில் வடிகட்டியை சிறிது நேரம் ஊறப்போடவும். பின் வெளியில் எடுத்து பழைய டூத் பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்த்துக் கழுவி விடவும். இப்போது வடிகட்டியின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்கு மற்றும் அடைப்புகள் அனைத்தும் நீங்கி ஃபில்டர் புதிது போன்ற தோற்றம் பெறும்.
ஒரு பௌலில் டெஞ்சர் டேப்லெட் (Denture Tablet) ஒன்றைப் போட்டு அதன் மீது வெது வெதுப்பான நீரை ஊற்றவும். அது கரைந்ததும் அந்த கரைசலின் உள்ளே வடிகட்டியைப் போட்டு பதினைந்து நிமிடம் ஊறவிடவும். இந்த மாத்திரை ஃபில்டரில் ஒட்டியிருக்கும் அனைத்து கறைகளையும் அடைப்புகளையும் நீக்கிவிடும். பின் ஃபில்டரை தண்ணீரில் கழுவி துடைத்து விட வடிகட்டி மீண்டும் உபயோகிக்க தயாராகி விடும்.
Readmore: அதிகமாக உடற்பயிற்சி செய்தால் இந்த பிரச்சனையெல்லாம் வரும்..!! – எச்சரிக்கும் நிபுணர்கள்