“கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ளாத கொங்கு மணமகள் தேவை” என்ற தலைப்பில் சமீபமாக ஒரு திருமண விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2023 மே 24ஆம் தேதியன்ற நாளிதழில் வந்த பழைய ஒரு விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் புதியதாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அதே சமூகத்தைச் சேர்ந்த வேக்சின் போடாத மணமகள் தேவை என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தொடர்புக்கு ஒரு மொபைல் எண்ணும் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் வைரலாகிய பிறகு, பலரும் கேள்விகள் எழுப்பினர்: சாதி ரீதியாக மணமக்கள் பார்ப்பது வழக்கம் தானே என்ற கேள்வி எழுந்தாலும், கொரோனா ஊசி போட்டுக் கொள்ளாத மணமகளை ஏன் கேட்கிறார்கள்? என்ற கேள்வி பலமாக எழுந்தது. ட்விட்டரில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்த விளம்பரம் தான் அதிகமாக விவாதத்திற்கு உள்ளானது.
இந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணுக்கு மக்கள் நேரடியாக அழைத்தபோது, அதற்கு பதிலளித்த நபர் தனக்கும் விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார். “சார், என் பெயரை சொல்லாதீங்க. நான் இந்த நம்பரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான் வாங்கினேன். அதற்கு முன்பு யாரோ பயன்படுத்தியிருந்தார்கள். அவங்க கொடுத்த விளம்பரத்தால் இப்போ நான் பாதிக்கப்படுகிறேன்.
அடிக்கடி என்னை அழைத்து திட்டுறாங்க, கேள்வி கேட்கிறாங்க. கடைசியில் இந்த நம்பரையே மாற்றிவைக்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டேன்…” என அவர் வருத்தமுடன் கூறினார். இந்த நம்பர், ஏற்கெனவே ஏர்டெல் வழியாக வேறு ஒருவரால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் Jio க்கு மாற்றப்பட்டிருந்தது. அதே எண்ணை தற்போது வைத்திருப்பவர் தான் சிக்கலில் சிக்கி தவித்து வருகிறார்.