உலகளவில் அதிகமாக ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நாடுகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் ஏற்றுமதி 2014 மற்றும் 2022 ஆண்டுக்கு இடையில் 2 பில்லியன் யூனிட் எண்ணிக்கையை கடந்துள்ளது. சமீபத்திய கவுண்டர்பாயின்ட் ஆராய்ச்சி வெளியிட்ட அறிக்கையின் படி, உலகளவில் 2-வது பெரிய மொபைல் போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின் படி, இந்த வளர்ச்சியின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் டிஜிட்டல் கல்வியறிவு, மேக்-இன்-இந்தியா முயற்சிக்கான அரசாங்கத்தின் உந்துதல் போன்றவைகள் தான் என்று கூறப்படுகிறது. ”இந்திய மொபைல் போன் ஒட்டுமொத்த உற்பத்தியில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் கீழ் 2 பில்லியன் யூனிட்களைக் கடந்தது” என்ற தலைப்பில் கவுண்டர்பாயின்ட் அறிக்கை வெளிப்படுத்திய விவரங்களையும் பார்ப்போம்.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன் ஏற்றுமதி 2014-2022 காலகட்டத்தில் 2 பில்லியன் ஒட்டுமொத்த யூனிட்களை தாண்டி, 23% சிஏஜிஆர் பதிவு செய்துள்ளது. 2022இல் உள்நாட்டு மொபைல் ஏற்றுமதிகளில் 98 சதவீதம் உள்நாட்டில் செய்யப்பட்டவை. இந்த முயற்சிகள் மூலம் உள்ளூர் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டலை அதிகரிக்க இந்தியா முயற்சிக்கிறது.
இதுகுறித்து கவுண்டர்பாயின்ட்டின் ஆராய்ச்சி இயக்குனர் தருண் பதக் கூறுகையில், ”இந்தியாவில் உள்ளூர் மதிப்பு கூட்டல் தற்போது 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இது 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இலக்காக இருந்தது. இந்தியாவில் இன்று சுமார் 200 மொபைல் பிராண்டுகள் தங்கள் சாதனத்தை அசெம்பிள் செய்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2014-க்கு முன் வெறும் இரண்டாக இருந்தது. இன்று, இந்தியா வியட்நாமை விட 1.8 மடங்கு அதிகமாகவும், சீனாவை விட 1/4 மடங்கு அதிகமாகவும் மொபைல் போன்களை உற்பத்தி செய்கிறது. தற்போது சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகியவை உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நாடுகளாக உள்ளன” என்று தெரிவித்தார்.