தந்தை மீதான புகாரில் அவரது மகன்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை அலங்காநல்லூரில், அப்பாவுக்கு பதிலாக மகன்களை பிடித்து போலீசார் விசாரித்த மற்றொரு வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நீ வந்தால் தான் உன் அப்பா வருவார் என்று மிரட்டி, அவரது இரண்டு மகன்களையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து செல்கிறார்.
மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர் தன் மகன்களின் திருமண செலவுக்காக 3 பவுன் தங்க செயினை தனது மாமியாரிடம் இருந்து வாங்கியுள்ளார். இதையடுத்து அந்த செயினை அடகு வைத்து பணத்தை திருமண செலவுக்கு பயன்படுத்தியுள்ளார். சில நாட்கள் கழித்து மாமியாருக்கும் ஆண்டிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நகையை திருப்பி தருமாறு அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் வெள்ளையம்மாள் புகார் அளித்துள்ளார்.
போலீசார் ஆண்டிசாமியிடம் நடத்திய விசாரணையில் நகையை வாங்கியதை ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட காலக்கெடுவில் நகையை திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் நகையை கொடுக்காததால் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ஆண்டிச்சாமியை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ஆண்டிச்சாமி வீட்டில் இல்லாத நிலையில் அவரின் இரு மகன்கள் யுவராஜ் மற்றும் தர்மராஜ் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். தந்தை மீதான புகாரில் அவரது மகன்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் அஜித் குமாரை தனியாக அழைத்து சென்று பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவற்றால் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.