காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கான உரங்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் ஜெ.பி பிரகாஷ் நட்டா கூறியதாவது ; காரீப் பருவத்தில் உரத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் யூரியா தடையின்றி விநியோகிப்பதற்கு வகை செய்ய வேண்டும். இதனையடுத்து தெலங்கானா மாநில விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப உரங்களின் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
யூரியாவின் பயன்பாடு அதிகரித்து வருவது மண் வளத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார். 2023-24-ம் ஆண்டு ரபி பருவத்துடன் ஒப்பிடும்போது 2024-25-ம் ஆண்டு ரபி பருவத்தில் யூரியா விற்பனை 21% கூடுதலாகும். இதேபோன்று, 2025-ம் ஆண்டு காரீப் பருவத்தில் இதுவரையிலான காலம் வரை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் யூரியா பயன்பாடு 12.4% ஆக அதிகரித்துள்ளது.
ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் மாற்று உரங்கள், இயற்கை விவசாயத்தின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கவும் பிரதமரின் பிரணாம் திட்டம் குறித்து மத்திய உரத்துறைச் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா விவரித்தார். விவசாயம் அல்லாத பயன்பாடுகளுக்கு யூரியா பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் மாவட்டங்களுக்கு இடையே உரங்களை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்யவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.