கறுப்புப் பட்டியலுக்கான ‘லூஸ் ஃபாஸ்டேக்’ குறித்து புகார் அளிக்கும் செயல்முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வலுப்படுத்துகிறது.
இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுங்கச்சாவடி செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், ‘வாகனங்களில் ஒட்டப்படாமல் தனியாக கைவசம் வைத்துள்ள ஃபாஸ்டேக் வில்லைகள்’ குறித்து புகார் அளித்து, அவற்றைக் கறுப்புப் பட்டியலில் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முகமை மற்றும் சலுகை பெறுபவர்கள் “டேக்-இன்-ஹேண்ட்” என்று அழைக்கப்படும் ‘தனித்தனியான ஃபாஸ்டேக்’ வில்லைகள் குறித்து உடனடியாகப் புகார் அளித்து, அவற்றைக் கருப்புப் பட்டியலில் சேர்க்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதன் கொள்கையை மேலும் நெறிப்படுத்தியுள்ளது.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள வருடாந்திர பாஸ் நடைமுறைகள் மற்றும் பல்தட தடையற்றப் போக்குவரத்துக்கான சுங்கக் கட்டணம் போன்ற முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, ஃபாஸ்டேக் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடு குறித்த நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. சில நேரங்களில் உரிமையாளர்களால் வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியில் ஃபாஸ்டேக் வில்லை வேண்டுமென்றே ஒட்டப்படுவதில்லை. இத்தகைய செயல்கள், சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது.
தவறான கட்டணங்களை உருவாக்குதல், சுங்கச் சாவடிகளில் மூடப்பட்டப் பாதைகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அதன் செயல்பாட்டு முறையில் பெரும் சவால்களை ஏற்படுத்துவதுடன், மின்னணு சுங்கச்சாவடி வசூல் கட்டமைப்பில் ஒட்டுமொத்த செயல்பாடுகளின் சீர்குலைவிற்கும் காரணமாக அமைகிறது. இதன் விளைவாக, சுங்கச்சாவடிகளில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட வழிவகுப்பதுடன், பிற தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒரு பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை வழங்கியுள்ளது. சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முகமைகள் மற்றும் சலுகை பெற்றவர்கள் இந்த மின்னஞ்சல் வாயிலாக, அத்தகைய ‘வாகனங்களில் ஒட்டப்படாமல் தனியாக வைத்துள்ள ஃபாஸ்டேக் வில்லைகள் குறித்து உடனடியாகப் புகாரளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில், புகாரளிக்கப்பட்ட ஃபாஸ்டேக் வில்லைகளைக் கருப்புப் பட்டியல் அல்லது நிரந்தரத் தடுப்புப் பட்டியலில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக மேற்கொள்ளும்.
98 சதவீதத்திற்கும் கூடுதலான பயன்பாட்டு விகிதத்துடன், ஃபாஸ்டேக் நடைமுறை நாட்டில் மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. “டேக்-இன்-ஹேண்ட்” என்று அழைக்கப்படும் வாகனங்களில் ஒட்டப்படாத தனியான ஃபாஸ்டேக் வில்லைகள் மின்னணு சுங்கக் கட்டண வசூல் நடவடிக்கைகளின் செயல்திறனுக்கு பெரும் சவாலாக அமைகிறது. எனவே இந்த புதிய முயற்சி சுங்கச் சாவடிகள் மிகவும் திறம்பட செயல்படுவதற்கு உதவிடும். இது தேசிய நெடுஞ்சாலையை உபயோகிக்கும் பயனர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயண அனுபவங்களை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.