தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. எனினும் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளால் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட நாளில் இருந்தே, தேர்தலில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்து வருகிறார். இது தொடர் விவாதமாக நடந்து வருகிறது.
இதனிடையே அண்ணாமலை ஒருபடி மேல் சென்று, அதிமுக – பாஜக ஆட்சியை பாஜக ஆட்சி என்றே கூறுவேன் என்று அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அதிமுக – பாஜக தொண்டர்களிடையே இணக்கமாக செயல்பட முடியாத சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைத்தாலும் கூட தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதான் என்கிறார்.
இதே நிலை தொடர்ந்தால், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துவிடும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர். கூட்டணி ஆட்சி- ஆட்சியில் பங்கு’ விவகாரம் நாள்தோறும் விவாதிக்கப்படும் நிலையில் இந்த குழப்பத்திற்கு தீர்வு காண அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
ஜூலை 26-ல் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அப்போது மோடியை இபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனாலேயே அன்றைய தினம் மேற்கொள்ளவிருந்த பரப்புரை 29 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்த பிறகு இருவரும் முதல் முறையாக சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: நோட்…! ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் அஞ்சல் அலுவலகம் செயல்படாது…!