கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார்.
” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது குற்றவியல் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்குங்கள்” என்று அஞ்சநேயா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தனது விரிவான புகார் கடிதத்தில், குமார் தனது பணியை சீர்குலைத்து வருவதாக அஞ்சநேயா குற்றம் சாட்டினார். மேலும் “அனைவருக்கும் முன்பாக அலுவலக அறையில் என்னை காலணியால் அடிப்பதாக அவர் மிரட்டினார்.. எனக்கு ஏதேனும் விபத்து நடந்தால், குமார் தான் பொறுப்பாவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “கடந்த காலங்களில் பணி புத்தகங்களைப் பார்த்தால், அவர் எம்.எம். ஜோஷியை அடித்துள்ளார், மூத்த அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்கவில்லை, முதல்வரின் சிறப்பு அதிகாரியாக இருந்தபோது ஈகோவுடன் நடந்து கொண்டார்” என்றும் குறீப்பிட்டுள்ளார்.
துணை முதல்வரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது இதுபோன்ற மோதல்களைத் தவிர்ப்பதற்காகவே கர்நாடக பவனில் இருந்து இடமாற்றம் செய்யக் கோரியதாக அஞ்சநேயா கூறினார்.
கர்நாடகாவில் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள பாஜக, இந்த சம்பவம் மாநில அரசாங்கத்திற்குள் ஆழமான பிளவுக்கு சான்றாக உள்ளதாக கூறியுள்ளது..
தங்களின் உதவியாளர்களுக்கு இடையிலான மோதல் மீண்டும் சித்தராமையாவிற்கும் சிவகுமாருக்கும் இடையே அதிகாரப் போராட்டம் குறித்த பேச்சைத் தூண்டியுள்ளது. 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வெற்றிக்கு இட்டுச் செல்ல இரு தலைவர்களும் இணைந்து பணியாற்றினர், ஆனால் அன்றிலிருந்து இருவருக்கு இடையே பதட்டங்கள் குறித்த வதந்திகள் தொடர்கின்றன..
2023 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, சித்தராமையா 2.5 ஆண்டு, டி.கே சிவகுமார் 2.5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகிப்பார்கள் என்று கூறப்பட்டது.. சமீபத்தில் கூட டி.கே சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.. எனினும் 5 ஆண்டுகளுக்குமே நான் தான் முதல்வராக தொடர்வேன் என்று சித்தராமையா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..