பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக சாடினார். எதிர்க்கட்சிகள் குழு ஒருபோதும் “சரியான” கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் “பொதுப் பிரச்சனைகள் தொடர்பான முக்கியமான கேள்விகளை அரசாங்கத்திடம் கேட்பது எதிர்க்கட்சியின் வேலை. சில நேரங்களில், நமது விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை நமது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஆனால் நமது படைகள் எத்தனை பாகிஸ்தான் விமானங்களைச் சுட்டு வீழ்த்தின என்பதை அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை. நீங்கள் கேள்விகள் கேட்க விரும்பினால், இந்த நடவடிக்கையில் நமது வீரர்கள் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்று கேளுங்கள். ஆனால் அதற்கான பதில் இல்லை,” என்று மக்களவையில் சிங் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரின் நோக்கத்தை விளக்கிய ராஜ்நாத் சிங், எல்லையைத் தாண்டுவதோ அல்லது ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதோ அதன் நோக்கம் அல்ல என்றார். மேலும் “பாகிஸ்தானால் வளர்க்கப்பட்ட பயங்கரவாத மையங்களை அழிப்பதே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியதன் நோக்கமாகும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்குவதே இதன் நோக்கமாகும்.
பயங்கரவாதத்தின் பெயரில் மறைமுகப் போரை நடத்தி பாகிஸ்தானைத் தண்டிப்பதே இந்த நடவடிக்கையின் அரசியல்-இராணுவ நோக்கமாகும். எனவே, ஆயுதப்படைகள் தங்கள் இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தகுந்த பதிலடி கொடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டது. போரைத் தொடங்குவதே இதன் நோக்கம் அல்ல.” என்று தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் எந்தத் தலைவரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டார்கெட் செய்து பேசியதாக தெரிகிறது. முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட ராகுல் காந்தி “ இந்திய தாக்குதலின் தொடக்கத்தில் பாகிஸ்தானுக்குத் தகவல் கொடுத்தது ஒரு குற்றம். இந்திய அரசு அதைச் செய்தது என்று EAM பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. 1. அதை யார் அங்கீகரித்தார்? 2. இதன் விளைவாக நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது?” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜெய்சங்கரின் 17 வினாடிகள் நீளமான வீடியோ கிளிப்பையும் அவர் இணைத்திருந்தார்.. எனினும். பத்திரிகை தகவல் பணியகம் பின்னர் அந்தக் கூற்றை நிராகரித்து, ஜெய்சங்கர் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக விளக்கம் அளித்தது.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி அரசாங்கத்தின் மீது தொடுத்த முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். அவரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் பதிலளித்துள்ளார்.
முன்னதாக பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரம்பத்தில் அறிவித்த போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : #Breaking : அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..