தமிழகத்தில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஆகஸ்ட் 1, 2025 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 5,500 லாரிகளை உள்ளடக்கியதாகும். இவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு எல்பிஜி வண்டிகளை கொண்டு செல்லும் பணி மேற்கொள்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சுங்கக் கட்டணத் தொகையை வழங்கல், வாடகை உயர்வு, புதிய டெண்டர் விதிமுறைகளில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியன் ஆயிலுடன் சென்னையில் நடைபெற்ற சமீபத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, “தொழில் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வேறு வழியின்றி வேலைநிறுத்தம் தான் எங்கள் கடைசி முடிவு,” என சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு ஏற்படும் இடங்கள்: சென்னை, தண்டையார்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பாட்டிலிங் பிளாண்டுகளில் இருந்து மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் தடைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது.
மார்ச் 2025-ல் நான்கு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்றபோது, பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு எட்டப்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. தற்போது, இந்தியன் ஆயில் நிறுவனம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தாலும், உடனடி தீர்வு இல்லையெனில் எல்பிஜி விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: நகங்கள் எப்படி வளர்கின்றன?. முன்பக்கமா…. பின்பக்கமா?. சுவாரஸிய தகவல்!