சமூக பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாக, மிகவும் எளிய நிலையில் உள்ள மற்றும் பெற்றோரின் ஆதரவை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு “அன்பு கரங்கள்” என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.
பெற்றோரை இழந்த குழந்தைகள் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடக்கூடாது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த உதவித்தொகை, அவர்களின் கல்விச் செலவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். இத்திட்டம், ஆதரவற்ற குழந்தைகள் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான சூழலில் வளர்வதை உறுதிசெய்யும்.
யாருக்கு நிதியுதவி கிடைக்கும்..?: பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், ஒரு பெற்றோர் இறந்து, உயிருடன் இருக்கும் மற்றொரு பெற்றோர் உடல் அல்லது மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தால்.
உங்கள் பகுதியில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்களில் நேரடியாகச் சென்று, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை பிரிவிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அதேபோல, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரில் சந்தித்தும் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர், தகுதியுள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
திட்டத்திற்கு விண்ணப்பிக்க குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டை நகல், குழந்தையின் வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், தாய்/தந்தை இறந்திருப்பின், இறப்புச் சான்றிதழ் இருந்தால் போதுமானது.