அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இரவு, இருநாளுக்கான பிரசாரத்திற்காக நெல்லை வந்தார். இந்நிலையில், நேற்று (ஆக.3) இரவு, நெல்லையில் உள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விருந்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் வாசல் வரை வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விருந்தில் 8 வகையான சூப்கள், சாலட்கள், குழிப்பணியாரம், அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், வீக் கிரேவிகள், வெறும் வெஜ் ரொட்டி வகைகள் என மொத்தம் 109 வகையான சைவ உணவுகள் விருந்தினர்களுக்காக பரிமாறப்பட்டது. விருந்துக்காக தனித்துவமாக செட் அமைக்கப்பட்டு, நவீன டேபிள்கள், நாற்காலிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விருந்தில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலட்சுமி, ஆர்.பி. உதயகுமார், பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவவிநாயகம், முன்னாள் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருந்தைத் தொடர்ந்து, வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. கூட்டணி உறுதியைப் போலவே, தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டும் பிரதான அம்சமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: சினிமா பாடலுக்கு AI மூலம் இசையமைத்த அனிருத்.. அவரே ஓபனா சொல்லிட்டாரே..!!