அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதே சமயம் பாகிஸ்தானுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது அமெரிக்கா மற்றும் இந்தியா உறவில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் உக்ரைன் போரை நிறுத்த மறுக்கும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தான் என்று தெரிய வந்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்தும்படி பலமுறை அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டார். ஆனால் ரஷ்யா அடிபணியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பில் எத்தனை பொருளாதார தடை விதித்தாலும், அதை ஈடுகட்டும் அளவுக்கு ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், இத்தனை நாட்கள் போர் நடந்தும் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை.
எனவே டிரம்ப்பின் கோபம் இப்போது நேரடியாக இந்தியா மீது திரும்பி உள்ளது. இந்தியாவை பலவீனப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அதிக வரி, பாகிஸ்தானுக்கு வரிச்சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்த சூழலில் அமெரிக்காவின் வரிவிதிப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்ட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைத்துள்ளதாக கடந்த 2ம் தேதி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்காவின் தடையை ஏற்று ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி முதல் ரூ.97 ஆயிரம் கோடி வரை கூடுதல் செலவாகலாம். பிற நாடுகளிடம் எண்ணெய் வாங்கும்போது ஒரு பேரலுக்கு குறைந்தது ரூ.438 கூடுதலாக செலவாகும். இது மேலும், உயர வாய்ப்புள்ளது.இதனால் உள்நட்டிலும் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அனைத்துப் பொருட்கள் சேவைகள் விலை உயரும் சூழ்நிலை உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.