விளம்பர நாடகங்கள் நடிக்கும் நேரத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து முதலமைச்சர் சிந்திப்பது, தமிழக மக்களுக்கு நல்லது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்று திருப்பூரில் எஸ்.ஐ கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலைகள், சாதாரண பொதுமக்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், பொதுமக்களைப் பாதுகாக்கும் காவல்துறையினரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது. பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை, சீருடையில் இருந்த பெண் காவலரிடம் செயின் பறிப்பு, இரண்டு வாரங்களுக்கு முன்பாக, சென்னை புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜாராமன், மதுபோதையில் இருந்தவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது, 4 நாட்களுக்கு முன்பாக, காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள், வாகனத்தில் இருந்த காவலர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த காணொளி, நேற்று இரவு திருப்பூர் மாவட்டத்தில், சிறப்பு துணை காவல் ஆய்வாளர் திரு. சண்முகவேல், வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது என, அரசு இயந்திரத்தின் முக்கியப் பொறுப்பான, சீருடை அணிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், தமிழ்ச் சமூகம், ஒழுக்கம் சீர்குலைந்து, தனது ஆன்மாவை இழந்து வருவதற்கான அறிகுறி.
ஒரு குற்றவாளி அல்லது ஒரு சாதாரண மனிதர், தனது கோபத்தை, கண்மூடித்தனமான வெறியாக வெளிப்படுத்தி, பொது இடத்தில் வைத்து ஒரு காவல்துறை அதிகாரியைக் கொலை செய்யும் அளவுக்குச் செல்வதற்கு எது அவர்களைத் தூண்டுகிறது இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து எப்படியும் தப்பிக்க முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தும் கொலை செய்யத் தயங்குவதில்லையே, ஏன்?
தமிழகத்தில் இன்று, மது விற்பனையில் வரும் லாபத்திற்காக, தமிழக அரசே சாராய விற்பனையாளர்களாக மாறி, அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை கணக்கில்லாமல் அதிகரித்து, கட்டுப்பாடில்லாமல், சாராயம் ஆறாக ஓடும் நிலைமைக்கு மாநிலத்தைத் தள்ளியிருப்பதும், முன்பெல்லாம், பணம் இருப்பவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் இருந்த போதைப் பொருள்கள், தற்போது, செயற்கை முறையில் புதிய விதத்தில் தயாரிக்கப்பட்டு, எங்கும் எளிதில் கிடைக்கும் வண்ணம், அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருப்பதும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை அனைத்து மட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு சீரழிந்திருப்பதுமே, முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. இவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காண்பதே, சமூகத்தில் ஓரளவு இயல்புநிலையைக் கொண்டு வருவதற்கு முக்கிய வழி.
இவற்றிற்கான முக்கியப் பொறுப்பு, தமிழகக் காவல்துறையைச் சார்ந்திருக்கிறது. ஆனால், தமிழகக் காவல்துறையினருக்குப் போதுமான அளவுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் சார்ந்த கருவிகள் வழங்கப்பட்டிருக்கின்றனவா என்றால், இல்லை
என்பதே உண்மை நிலையாக இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், காவல்துறையை மேம்படுத்தவும், பொதுமக்கள், காவல்துறையினர் உறவை மேம்படுத்தவும், காவல்துறையினர் நலனுக்காகவும் எனக் கூறி, ஓய்வு பெற்ற
நீதிபதி திரு. சி.டி.செல்வம் அவர்கள் தலைமையில், காவல் ஆணையத்தை அமைத்து அறிவிப்பு வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
அந்த ஆணையம், ஒரு ஆண்டுக்குப் பிறகு, தனது முதல் அறிக்கையை, கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம், முதலமைச்சரிடம் அளித்ததாகச் செய்திகள் வெளிவந்தன. முதலமைச்சர் அறிக்கையைப் பெற்று இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் கூறப்பட்டிருந்தன, அவற்றில் எவை எவை
செயல்படுத்தப்பட்டுள்ளன என எந்தத் தகவலும் இல்லை.
தமிழகக் காவல்துறையில், காலி இடங்கள் அதிக அளவில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால், காவல்துறையினர், கூடுதல் பணிச்சுமையால் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். காவல்துறையினருக்கு முறையான ஓய்வு மற்றும் சரியான பணி நேரம் நிர்ணயிக்கப்பட்டால்தான், அவர்கள் பணித்திறன் முழுமையாக வெளிப்படும். ஆனால், காலிப் பணியிடங்களை குறித்த நேரத்தில் நிரப்பக் கூட திமுக அரசு தயாராக இல்லை.
போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால், பிரச்சினையான பகுதிகளுக்குக் காவலர்கள், தனியாகச் செல்ல நேர்கிறது. இதனால், அவர்கள் ஆபத்துக்குள்ளாகிறார்கள். பொதுமக்களைக் காக்கும் காவல்துறையினர், முழுமையான தொழில்நுட்பத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கான
உடனடி நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினர், குறிப்பாக கீழ் அடுக்கில் உள்ள துணை ஆய்வாளர் மற்றும் அதற்குக் கீழே உள்ளவர்களுக்கு, புதிய தொழில்நுட்ப ரீதியான கருவிகள் வழங்கப்பட வேண்டும்.
டேசர் துப்பாக்கிகள், உடல் கேமராக்கள், விலை அதிகம் என்பதால், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வாங்கப்படுகின்ற க்ளோக் ரக துப்பாக்கிகளுக்குப் பதிலாக,
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சிறந்த தொழில் நுட்பத்துடன் கூடிய ரோந்து வாகனங்கள் வழங்கப்படுதல், மேலும், மிக முக்கியமாக காவல்துறையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இதுவே சரியான நேரம்.
ஆட்சி அதிகார உயர்மட்டத்தில் இருப்பவர்களின் கொள்கை ரீதியான தோல்விகள் எப்போதும், சமூகத்தில் அடிமட்டத்தில் சாதாரண மனிதனை நேரடியாகப் உள்ள ஒரு
பாதித்துக்கொண்டிருக்கின்றன. தனது துறை சார்ந்த நடவடிக்கைகளைக் கூட முழுமையாக மேற்கொள்ளாமல் நீண்ட நெடிய தூக்கத்தில் இருக்கும் தமிழக உள்துறை அமைச்சரான நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, இது ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். விளம்பர நாடகங்கள் நடிக்கும் நேரத்தில், இது போன்ற உடனடியாக நிறைவேற்ற வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து முதலமைச்சர் சிந்திப்பது, தமிழக மக்களுக்கு நல்லது.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : ஆமை வேகத்தில் நகரும் குழு.. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு மனமில்லை..!! – அன்புமணி சாடல்