கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட 51 அரசு மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், சட்டவிரோதமாக விடுப்பில் இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போதிலும் அவர்கள் பதில் தரவில்லை. இதன் காரணமாக மருத்துவப்பணிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவக்கல்வி துறையில் பணி செய்து வந்த 51 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். நீண்ட அங்கீகரிக்கப்படாத விடுப்பில் உள்ள ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால், பணி நியமன உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் சேவை மனப்பான்மை கொண்ட மற்றும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீண்ட அங்கீகரிக்கப்படாத விடுப்பில் உள்ள ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறைக்கு அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டிருந்தார். இந்த ஆண்டு ஜனவரியில், 1,194 மருத்துவர்கள் உட்பட, கிட்டத்தட்ட 2,000 அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஒழுங்காக பணிக்கு வராததால், பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியது.
இந்தப் பட்டியலில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் (DHS) கீழ் உள்ள மாவட்ட மற்றும் பொது மருத்துவமனைகள் வரை பல்வேறு சுகாதார வசதிகளைச் சேர்ந்த 859 மருத்துவர்கள் உள்ளனர். மேலும் இதில் மருத்துவமனைகளில் பணிபுரியும் 252 செவிலியர்களும் இதே போன்ற காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.