சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவு. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை.
சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளையும் தனியாரிடம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு, பணி பாதுகாப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தனியாருக்கு விடக்கூடாது. தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆக.1-ம் தேதி முதல் உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், ‘தூய்மைப் பணியில் தனியாரை அனுமதிக்க கூடாது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, பணி புறக்கணிப்பும் செய்து வருகின்றனர்.
மேலும் தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.