தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் பள்ளிக்கல்வித்துறைக்கு 673 ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிநாடுநர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் 25,26 நாளில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்துடன் பணிநாடுநர்களின் பெயர் விவரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நியமன அலுவலர்களான முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் நிர்வாக வரம்புக்குட்பட்ட பணிநாடுநரின் விவரங்களைக் கண்டறிந்து பட்டியல் தயார் செய்து, அவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ள விவரங்களைக் குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும். தங்கள் ஆளுகைக்குட்பட்ட பணிநாடுநர்கள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டதை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் 27.09.2023 அன்று பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளதால் அந்நாள் வரை பணிநாடுநர்கள் தங்கள் சொந்த செலவில் தங்கும் வசதி மற்றும் இதர வசதி ஏற்பாடு செய்து கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.