தமிழகத்தில் 2 கோடியே 22 லட்சத்து 59,224 குடும்ப அட்டைகள் உள்ளன. 18 லட்சத்து 9 ஆயிரத்து 677 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் போது பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்ன…? அப்படி ஒருவேளை தவறு செய்யும் பட்சத்தில் உங்களது ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்க படலாம். அதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதற்கான காரணம்
ஒரு குடும்பம் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருந்தால் அல்லது தவறான தகவல்களைக் கொடுத்து ரேஷன் கார்டைப் பெற்றிருந்தால், அந்தக் கார்டு ரத்து செய்யப்படும். மேலும் ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், முகவரி அல்லது வேறு ஏதேனும் முக்கியமான தகவல்கள் தவறாக இருந்தால், அதைச் சரி செய்யாத பட்சத்தில் ரத்து செய்யப்படலாம்.
அதேபோல ரேஷன் கார்டுகள், குறிப்பாக பி.பி.எல். (BPL) போன்ற திட்டங்களுக்கானவை, ஒரு குறிப்பிட்ட வருமான வரம்புக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அந்த வருமான வரம்பை ஒரு குடும்பம் தாண்டும்போது, அதன் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம். மேலும் ஒரு ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இறந்தாலோ அல்லது தமிழ்நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறினாலோ, அந்தக் கார்டு ரத்து செய்யப்படும்.
திருமணம் ஆன பெண்கள், அவர்களின் பெயரை கணவரின் ரேஷன் கார்டில் சேர்த்த பிறகு, பழைய கார்டிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஒருவேளை அவ்வாறு செய்யப்படாமல், இரண்டு கார்டுகளிலும் பெயர் இருந்தால், அது ரத்து செய்யப்படலாம். சில குடும்பங்கள் நீண்ட நாட்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்காமல் இருக்கலாம். அத்தகைய கார்டுகளை அரசு ஆய்வு செய்து, பயன்பாட்டில் இல்லாததாகக் கருதி ரத்து செய்யலாம்.
ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை
விண்ணப்பப் படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அல்லது வருமானம் போன்ற தகவல்களைத் தவறாகப் பூர்த்தி செய்யாதீர்கள். இது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட முக்கிய காரணமாகும். போலியான ஆதார் அட்டை, முகவரிச் சான்று அல்லது வேறு எந்த ஆவணத்தையும் பயன்படுத்த வேண்டாம். அரசு இதை எளிதில் கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். ஒரு குடும்பம் ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருக்கும்போது, மீண்டும் ஒரு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கக்கூடாது. இது சட்டப்படி தவறு.
ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது அல்லது மின்சார கட்டண ரசீது, சமையல் எரிவாயு இணைப்புக்கான புத்தகம், குடும்ப தலைவர் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, முந்தைய ரேஷன் கார்டு (இருந்தால்), குடும்பத்தில் உள்ள அனைவரின் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல், வாடகை ஒப்பந்தம் (இருந்தால்), வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம். சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புவிப்பு சான்று (முந்தைய முகவரியில் ரேஷன் கார்டு இருந்தால்). பெற்றோர் அல்லது காப்பாளர் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்ததற்கான சான்று (அல்லது) இதற்கு முன் குடியிருந்த இடத்தில் குடும்ப அட்டையில் பெயர் இல்லை என்ற சான்று இருக்க வேண்டும்.