1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை நாம் வழங்கினால், ‘MINIMUM BALANCE’ இல்லை எனச் சொல்லி, கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. ஆனால் எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரவில்லை. சொல்லப் போனால், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியாயில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருக்கிறது.
2024-25-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன? பணமதிப்பு இழப்பு என்று சொல்லி நன்றாக இருந்த இந்திய பொருளாதாரத்தையே படுகுழிக்குத் தள்ளிவிட்டார்கள். இந்த மேற்கு மண்டலத்தில் திருப்பூரும், கோவையும் தொழில்கள் நிறைந்த மாநகரங்கள். ஆனால் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. என்று ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்த இரண்டு நகரமும் நொடிந்து போயிருக்கிறது.
2008-ஆம் ஆண்டு நிலவை நோக்கிய பயணத்தை இந்தியா தொடங்கி, 2023-இல் அந்தச் சாதனையின் எல்லையை நெருங்கி இருக்கிறது. இதுவும் தனிப்பட்ட பா.ஜ.க ஆட்சியின் சாதனை இல்லை. விண்வெளி ஆராய்ச்சிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலம் முதல் தூவப்பட்ட விதைகளின் விளைச்சல்தான் சந்திரயான் விண்கலம். இது இரவும் பகலும் உழைத்த நம்முடைய இஸ்ரோ அறிவியலாளர்களின் சாதனை. பண்டிதர் நேரு தொடங்கி மதிப்புக்குரிய மன்மோகன் சிங் அவர்கள் வரை பல பிரதமர்களின் பங்கு இதில் இருக்கிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புக் கூட்டத்தொடரில் இதை எல்லாம் சுட்டிக்காட்டிப் ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியிடம் அவருடைய ஆட்சியின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்து கணக்கு காட்டப் பார்க்கிறார். இதையாவது சொல்லி வாக்கு கேக்கலாம் என்று நினைப்பதாக கூறினார்.