உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மக்களின் மனநிலையை அறியும் விதமாக மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்னும் தலைப்பில் அறிவுசார் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” 15.7.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.இந்தத் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள சிந்தனைகள், மாற்றங்கள் குறித்து, மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பல்வேறு அறிவுசார் போட்டிகளை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.
“மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி”- என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைப் பாதையில் தமிழ்நாடு அரசு மக்களின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு மற்றுமொரு சான்றாக “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் புதிய திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் வாயிலாக மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15, 2025 முதல், நவம்பர் 2025 வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.அரசின் சேவைகளை மிக விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகிறது.