தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணியாளர்கள் கண்காணிக்க அறிவுரை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.
மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர். இந்த நிலையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணியாளர்கள் கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
குழு வாரியாக நகர்வு வழித்தடம் (Route Chart) ஏற்படுத்தப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாதமும் விநியோகம் செய்ய வேண்டும். வாகனம் மூடிய வாகனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் எடைத்தராசு, POS இயந்திரம் முதலியவை கொண்டு செல்லப்பட வேண்டும். தேவை இருப்பின் பதிவேடுகள் / படிவங்கள் அனைத்தும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும். கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் சேதமின்றி வாகனத்தில் கொண்டு சென்று விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தரமான கட்டுப்பாட்டுப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். மின்னணு எடைத் தராசின் மின்கலம் மற்றும் விற்பனை முனையக் கருவி (POS) ஆகியவை போதுமான அளவு மின்னேற்றம் (Charging) செய்யப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருட்களுக்கு தகுந்த இடப்பெயர்வு காப்பிடு (Transit Insurance) செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.