நாட்டில் சமீப காலமாக கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தநிலையில் தற்போது தெலுங்கானாவில் அதேபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கணவன் தனது மனைவியை பட்டினி போட்டு சித்திரவதை செய்து மிருகத்தைப் போல அடித்துக் கொன்றதாகவும் கூறப்படும் மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலுங்கானாவின் கோத்தகுடேம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, பல வருடங்களாக துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்த பின்னர் கணவர் தனது மனைவியைக் கொன்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் கம்மம் மாவட்டத்தின் கல்லுரு மண்டலத்தில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி பிரசன்னா (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு கான்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பூலா நரேஷ் பாபு என்ற நபருடன் லட்சுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளாக அஸ்வராவ்பேட்டையில் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று நரேஷ் பாபு தனது மனைவி படிக்கட்டில் இருந்து விழுந்துவிட்டதாக லட்சுமியின் பெற்றொருக்கு தகவல் அளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், லட்சுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்தபோது, அவரது உடல் பலத்த காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவரது உடல் முழுவதும் புதிய மற்றும் பழைய காயங்களின் அடையாளங்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், லட்சுமியை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் துன்புறுத்தி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். பெற்றோரைச் சந்திக்கவும், அறையை விட்டு வெளியே வரவும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது. நரேஷ் பாபுவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சித்திரவதை செய்து இறுதியில் வரதட்சணைக்காக கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விவகாரம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை.