அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றம் தான், ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி, ஜாமீன் மனு மீதான விசாரணை செப். 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அதன்படி செப்டம்பர் 20ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சென்னை புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 7-வது முறையாக காவல் அவரது காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் மனு மீதான இன்று விசாரணைக்கு வருகிறது.