தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், பாஜக உடன் கை கோர்த்துள்ளது அதிமுக.. மேலும் சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுகிறது..
இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக.. இதற்கான காய்களையும் நகர்த்தி வருகிறது..
இந்த நிலையில், டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் தமிழக பாஜக உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கொண்டனர்.. எனினும் இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளாராம்.. கருத்து வேறுபாடு, உட்கட்சி பூசல்களை தவிர்ப்பது மிக மிக நல்லது என்றும் பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்..
தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளிடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.. கடந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்திருந்த போது, அன்னபூரணா ஹோட்டல் நிறுவனர் ஜிஎஸ்டி வரியை விமர்சிக்கும் வகையில் பேசியது சர்ச்சையானது.. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது.. அண்ணாமலை இதற்கு அப்போதே மன்னிப்பு கோரியிருந்தார்..
ஆனால் இந்த சர்ச்சைக்கு பின்னர் அண்ணாமலை – நிர்மலா சீதாராமன் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்று கூறப்படுகிறது.. அதே போல் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது..
எனவே உட்கட்சி பூசல்கள் அதிகரிப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும், அவற்றை உடனே களைய வேண்டும் எனவும் அமித்ஷா அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் இந்த உட்கட்சி பூசல்கள் தேர்தலில் பிரதிபலிக்கக்கூடும் என்பதால் இந்த பூசல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமித்ஷா பேசியதாக கூறப்படுகிறது..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது, கூட்டணியில் கூடுதல் கட்சிகளை இணைப்பது குறித்து அமித்ஷா விவாதித்ததாகவும் கூறப்படுகிறது..
Read More : அலர்ட்.. அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல்.. உடனே இதை செய்ய வேண்டும்..! தமிழக அரசு முக்கிய உத்தரவு..