என் டி ஏ கூட்டணியில் கூட்டணியில் அதிமுக, அமமுக, ஓ.பன்னீர் செல்வம் அணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இருந்தன. ஆனால், அதிமுகவில் தொடர்ச்சியாக உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், பல தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், திடீரென என்டிஏ கூட்டணியை விட்டு விலகினர். இந்த அதிரடி முடிவால் கூட்டணிக்குள் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. அவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது:
”இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய விஷயம். நேர்மையான நல்ல மனிதர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நயினார் நாகேந்திரனை பொறுத்தவரையில் எனக்கு தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர். நான் வெளியேறுவதற்கான காரணத்தை அனைத்தையும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். என்றார்.
மேலும் அவர், “செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு அவர் முயற்சிக்கு தனது வாழ்த்துக்கள். அது கண்டிப்பாக வெற்றி பெறும். எந்த துரோகத்திற்காக நாங்கள் கட்சி தொடங்கினோமோ எங்களது தொண்டர்கள் பாதிக்கப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோமோ அந்த துரோகத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.
அங்கு இருக்கக்கூடிய நபர்களில் யார் மீதும் கோபம் இல்லை. அங்கு இருக்கக்கூடிய ஒரு நபரையும், அவரை சார்ந்தவர்களையும் தான் நாங்கள் ஏற்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார்” என்று தெரிவித்தார்.
Read more: இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு AI படிப்பு…! ஐஐடி சூப்பர் அறிவிப்பு..!