மதுரை நகரின் தவிட்டுச் சந்தையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில், பக்தர்களின் அன்பையும், ஆன்மீகப் பக்தியையும் சுமந்து நிற்கும் தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் திரௌபதி அம்மனுடன், சந்தோஷி மாதா, சனீஸ்வரர், வலம்புரி விநாயகர், ஸ்ரீ சத்யநாராயண சுவாமி, ஸ்ரீ நல்லமுடி அரவான், வீரபத்திரர், பத்திரகாளி குரு உள்ளிட்ட பல தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
சிலப்பதிகாரம் கூறும் வரலாற்று பதிவின்படி, கண்ணகியின் கோபத்தால் மதுரை நகரம் எரியாமல் தடுக்க, அங்கிருந்த மக்கள் பார்வதி தேவியை வேண்டினர். அப்போது பார்வதி தேவி, பாண்டவர்களின் துணைவியான திரௌபதியை அருள்புரிய அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி இந்தக் கோயில் நிறுவப்பட்டது என்பது மதுரையின் ஆன்மிக வரலாற்றில் தனித்துவமான பக்கமாகும்.
வடஇந்தியாவில் அதிகம் வழிபடப்படும் சந்தோஷி மாதா, தென்னிந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறார். ஆனால் இக்கோயிலில் அவருக்கென சன்னதி அமைந்திருப்பது மிகப்பெரும் சிறப்பாகும். சந்தோஷி மாதாவை வழிபட்டால் குழந்தைப் பேரு, திருமண தடைகள் நீக்கம், ஐஸ்வர்ய வளர்ச்சி மற்றும் தீய சக்திகளின் பாதிப்பு அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் குருபகவான் பூஜை, வெள்ளிக்கிழமைகளில் திரௌபதி அம்மன் வழிபாடு, சனிக்கிழமைகளில் சனீஸ்வரர் வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும், ராகுகாலத்தில் திரௌபதி அம்மனுக்கு அரளிப்பூ மாலை சாத்தும் பாரம்பரியம் மக்கள் மத்தியில் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் பௌர்ணமி திருவிழா, வைகாசி மாதத்தில் நடைபெறும் 16 நாட்கள் திருவிழா மற்றும் ஆடி மாதத்தில் நடைபெறும் சிறப்பு விழாக்கள் பக்தர்களின் கூட்ட நெரிசலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மதுரை மற்றும் அருகிலுள்ள பகுதிகளைத் தாண்டியும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசிப்பதும் இக்கோயிலின் ஆன்மிகக் கண்ணியத்தை வெளிப்படுத்துகிறது. மதுரையின் ஆன்மிக மரபை சுமந்து நிற்கும் இந்தத் திரௌபதி அம்மன் கோயில், பக்தர்களுக்கு நம்பிக்கையும் நிம்மதியும் அளிக்கும் ஒரு புனிதத் தலமாக என்றும் திகழ்கிறது.
Read more: திரும்பவும் கரூர் செல்லாதது ஏன்? 3 நாட்களுக்கு பின் விஜய் சொன்ன விளக்கம்..



