தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான அரசுத் துறை சார்ந்த வாகனங்களுக்கான பதிவுச் சான்று செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த தடை டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 2.45 லட்சம் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் அடங்கும்.
கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 1-ம் தேதிக்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களைப் பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தடை விதித்தது. இத்தகைய வாகனங்களுக்கான பதிவுச் சான்றை வாகன இணையதளம் வாயிலாக ரத்து செய்தும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே, அத்தியாவசியச் சேவைகள் தடைபடுவதைத் தடுக்கும் வகையில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்தும் வகையில் 2 முறை தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. அந்த அனுமதிக்கான கால அளவும் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.