தேசிய நெடுஞ்சாலைகளில் QR குறியீடு தகவல் பலகைகளை நிறுவ இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது .
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கியூ.ஆர். குறியீடு கொண்ட தகவல் பலகைகளை நிறுவவுள்ளது. இந்தப் பலகைகள், நெடுஞ்சாலைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் அவசரகால உதவி எண்களை வழங்கும்.இந்த கியூ.ஆர். குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், நெடுஞ்சாலையின் எண், நீளம், கட்டுமான/பராமரிப்புக் காலங்கள், சுங்கச்சாவடி மேலாளர், திட்ட மேலாளர் மற்றும் 1033 அவசரகால உதவி எண் போன்ற தொடர்பு எண்கள் கிடைக்கும்.
அத்துடன், அருகில் உள்ள மருத்துவமனைகள், எரிவாயு நிலையங்கள், கழிப்பறைகள், காவல் நிலையங்கள் மற்றும் பிற வசதிகள் பற்றிய விவரங்களையும் இது அளிக்கும்.சாலையோர வசதிகள், சுங்கச்சாவடிகள், ஓய்வு பகுதிகள் போன்ற இடங்களில் இந்தப் பலகைகள் வைக்கப்படும். இந்த முன்முயற்சி, பயணிகளின் அனுபவத்தையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதோடு, சாலை பாதுகாப்பையும் அதிகரிக்கும்.