கரூர் சம்பவம் தொடர்பாக நீதிபதிகள் மீது அவதூறு பரப்பிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு பிறகு, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் உரிய நிபந்தனைகளை விதிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என். செந்தில்குமார் முன்பு 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், கரூர் சம்பவ கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெகவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து அவர், “நெரிசல் ஏற்பட்ட போது பொதுமக்களை குழந்தைகளை மீட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் கூட்டத்தை ஏற்பாடு செய்த தவெக கட்சி தொண்டர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தெரிவித்தார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த டேவிட், சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சசிகுமார் ஆகியோர் சமூக வலைதளங்களில் நீதிபதிக்கு உள்நோக்கம் கற்பித்து அவமதிக்கும் வகையில் பதிவுகள் வெளியிட்டதற்காக்வும், அதில் கரூர் துயரச் சம்பவம் குறித்து நீதிபதி வெளியிட்ட கடுமையான கருத்துகளை குறைத்து மதிப்பிடும் வகையிலும், தவறான தகவல்களையும் பரப்பி இருந்ததாக கூறி புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்கண்ட மூவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.