கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜுன் எனும் மாணவன், அதே பள்ளியில் படித்து வந்தவர். இவர் சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியர் ஆஷாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஆட்சேபனைக்குரிய செய்தி ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஆசிரியர், மாணவனை அழைத்து கடுமையாக கண்டித்ததுடன், “இந்தச் செய்தி குறித்து சைபர் செல்லில் புகார் அளித்து, ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற வைப்பேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல் காரணமாக மன அழுத்தத்திற்குள்ளான அர்ஜுன், வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினர், “ஆசிரியை தொடர்ந்து மிரட்டியதும், மாணவனை உடல்ரீதியாக தாக்கியதும்” தான் இந்த துயரத்துக்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்குப் பிறகு, பள்ளி நிர்வாகம் இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது: “சமூக ஊடகப் பயன்பாடு குறித்து ஒரு சாதாரண எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மேலும், அர்ஜுன் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவது பற்றிய முடிவால் மன வருத்தத்தில் இருந்திருக்கலாம்,” என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜுனின் குடும்பத்தினர் ஆசிரியை மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் பாலக்காடு மட்டுமின்றி முழு கேரள மாநிலத்திலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகப் பயன்பாட்டின் தாக்கமும், பள்ளி சூழலில் மாணவர்களின் மனநிலையையும் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Read more: துலாம் ராசியில் சுக்கிரன்; இந்த 3 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.. பெரும் ஜாக்பாட்!



