டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை மேற்கொண்டு சோதனை நடத்த தடை விதித்தது.
இதனிடையே டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் மே மாதம் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
அதே போல் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷ், விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு இடமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் வீடு, அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
தனது வீடு, அலுவலகத்திற்கு சீல் வைத்ததை எதிர்த்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி அமலாக்கத்துறை தனக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாக ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராக கோரி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்..
Read More : தட்டி தூக்கிய CVS…! திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்…!



