வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும். ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் குறிப்பிட்ட பங்குதொகை வழங்குவதற்கேற்ப அதற்கான விகிதாசாரத்தை நிர்ணயம் செய்யமுடியும்.நிரந்தர வைப்புதொகை கணக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப வாரிசுதாரர்களை நியமிக்க முடியும்.தங்கநகைகள் மற்றும் ஆபரணங்களை வங்கிகளில் பாதுகாப்பாக வைப்பதற்கான பெட்டக வசதி கொண்ட வாடிக்கையாளர்களும் வாரிசுதாரர்களை நியமிக்க முடியும். வாடிக்கையாளர் மரணம் அடையும் பட்சத்தில் வாரிசுதாரர்களில் முதன்மையானவர் பாதுகாப்பு பெட்டக வசதியை செயல்படுத்தமுடியும்.
வங்கி நடைமுறைகளில் உரிமை கோரல் தொடர்பான தீர்வுகளை திறம்படவும், வெளிப்படைதன்மையுடனும் ஒரே மாதிரியாகவும் மேற்கொள்ள ஏதுவாக வாடிக்கையாளரின் முன்னுரிமை அடிப்படையில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது.வங்கி வாரிசுதாரர் நியமன விதிமுறைகள் 2025-ன்படி, வாரிசுதாரர்களை நியமனம் செய்வதற்கோ அல்லது நீக்குவதற்கான விரிவான நடைமுறைகள் மற்றும் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் செயல்பாட்டிற்கு வருகிறது.
வங்கிகளின் நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையிலும், ரிசர்வ் வங்கிக்கு ஒரே மாதிரியான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் வகையிலும், வாடிக்கயாளர்கள் மற்றும் முதலீட்டார்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், பொதுத்துறை வங்கிகளில் தணிக்கை நடைமுறைகளை மேம்படுத்தும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கான வசதிகளை அதிகரிக்கும் வகையிலும் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



