பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், இடைத்தேர்தல்களையும் அறிவித்தது. பீகார் தேர்தல்களில் வாக்குப்பதிவு முறையே நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 126 (1)(b), அந்த வாக்குச் சாவடியில் எந்தவொரு தேர்தலுக்கும் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடையும் நாற்பத்தெட்டு மணிநேரம் (அமைதி காலம்) வரை, தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற சாதனங்கள் மூலம் எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் காட்சிப்படுத்துவதைத் தடை செய்கிறது.
மேற்கூறிய பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 48 மணி நேர காலப்பகுதியில் தொலைக்காட்சி/வானொலி சேனல்கள் மற்றும் கேபிள் நெட்வொர்க்குகள் தாங்கள் ஒளிபரப்பும்/காண்பிக்கும் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கங்களில், எந்தவொரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளரின் வாய்ப்பை ஊக்குவிப்பதாக, முன்னறிவிப்பதாகவோ அல்லது தேர்தல் முடிவைப் பாதிக்கும், பாதிப்பதாகவோ கருதக்கூடிய எந்தவொரு உள்ளடக்கமும், குழு உறுப்பினர்கள்/பங்கேற்பாளர்களின் கருத்துக்கள்/முறையீடுகள் உட்பட, வெளியிடக்கூடாது என்பதை ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது.
இதில் எந்தவொரு கருத்துக் கணிப்பையும் காண்பிப்பதும் அடங்கும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் பிரிவு 126A-ன் கீழ், நவம்பர் 6 (வியாழக்கிழமை) காலை 7:00 மணி முதல் நவம்பர் 11 (செவ்வாய்) மாலை 6.30 மணி வரை எக்ஸிட் போல் நடத்துவதும், அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் அவற்றின் முடிவுகளைப் பரப்புவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் அறிவித்துள்ளது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126 -ஐ மீறுவது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.ஆணையம் அனைத்து ஊடக நிறுவனங்களையும் இந்த விஷயத்தில் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது.



