கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சதயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரெஜிலா(36). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால், அடிக்கடி சண்டைகள் நடப்பது வாடிக்கை. மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சஜீர் மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்துள்ளார்.
பேயை விரட்டுவதாக சொல்லி, மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் பல முறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கணவர் மீது புகாரும் கொடுத்திருக்கிறார். போலீசார் எச்சரித்த போதும் சஜீர் மனைவியை அடிப்பதை நிறுத்தவில்லை. இதற்காக பல மந்திரவாதிகளை சந்தித்த சஜீர், மனைவி மேல் உள்ள பேயை விரட்ட ஸ்பெஷல் மாந்திரீக டிரெயினிங்கையும் கற்றுக்கொண்டு வந்துள்ளார்.
மந்திரவாதியின் பேச்சை கேட்டு சில சடங்குகளை ரெஜிலாவுக்கு செய்ய சஜீர் தயாரானார். சம்பவத்தன்று சடங்கு செய்வதற்காக மனைவியை அழைத்த சஜீர், ரெஜிலாவின் தலைமுடியை கலைத்து, மனைவியின் உடம்பெல்லாம் சாம்பலை பூசினார்.. பிறகு மாந்திரீக கயிற்றை கையில் கட்டிவிட்டு, பேய் ஓட்டுவதற்கான அடுத்த சடங்குகளை செய்ய தயாரானார்.
இதற்கு ரெஜிலா மறுப்பு தெரிவிக்கவே, சஜீர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். தடுக்க வந்த மகனையும் சஜீர் கடுமையாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சஜீர், அடுப்பில் கொதித்து கொண்டிருந்த மீன் குழம்பை எடுத்து வந்து ரெஜிலாவின் முகத்தில் ஊற்றிவிட்டார்.
இதனால் வலியால் ரெஜிலா அலறி துடித்தார்.. அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதற்குள் சஜீர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரெஜிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஜீரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



