வயதான பின்னர் ஏற்படும் மறதி (டிமென்ஷியா) குறித்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (KGMU) மற்றும் லக்னோப் பல்கலைக்கழகத்தின் PGI இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அதில் ஆண்களை விட 3 மடங்கு பெண்கள் அதிகம் நினைவிழப்புக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது..
இந்த ஆய்வில் 350 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். ஆண்களில் 100 பேரில் 13 பேருக்கு நினைவிழப்பு ஏற்பட்டால், அதே வயது பிரிவில் உள்ள பெண்களில் இது 100 பேரில் 39 பேரை பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், விதவை மற்றும் தனியாக வாழ்வும் பெண்கள் நினைவிழப்புக்கு அதிகம் ஆளாகின்றனர் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
காரணங்கள்
ஆய்வாளர்களின் விளக்கம் படி, பெண்களில் நினைவிழப்பு அதிகரிக்கக் காரணம் வயதானது மட்டும் அல்ல. மாறாக, போஷாக்குறை, மன அழுத்தம், தனிமை போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. குடும்பத்திலிருந்து பிரிந்து வாழும் பெண்கள், சீரான உணவுக் பழக்கமின்றி வாழ்வது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
விளைவுகள்
நினைவிழப்பு கொண்ட பெண்கள் சிந்தனை, முடிவு எடுக்கும் திறன், மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றில் குறைவைக் காண்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், இவர்கள் அடிக்கடி பொருட்களை மறத்தல், கோபம், தூக்கமின்மை, சந்தேகம், நாளாந்த வேலைகளில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் காண்கிறார்கள்.
மேலும், இவர்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பிரச்சனைகள் போன்ற உடல் நலக் குறைகளும் அதிகமாகக் காணப்படுகின்றன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில், பெண்களின் மனநலம் மற்றும் சமூக இணைப்பு குறைவாகும் போது, அது மூளையின் நினைவாற்றலையும் தீவிரமாக பாதிக்கிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



