இந்துக்களின் வழிபாட்டு மரபில், எந்தவொரு காரியத்தை தொடங்கும் முன்னரும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவது வழக்கம். விநாயகரை வணங்கித் தொடங்கும் காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றி பெறும் என்பது ஆழமான நம்பிக்கை. மற்ற தெய்வங்களின் வழிபாட்டு முறைகளில் இருந்து விலகி, விநாயகரை வழிபடும் முறை சற்று மாறுபட்டதாகும். தலையில் குட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் அவரை வழிபடுவது ஏன் என்பதற்கும், இதில் உள்ள அறிவியல் பின்னணிக்கும் பல விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
தோப்புக்கரணத்தின் புராண மற்றும் அறிவியல் பின்னணி :
விநாயகரை வணங்கும்போது தோப்புக்கரணம் போடுவது கட்டாய சடங்காக உள்ளது. புராணக் கதைப்படி, கஜமுகாசுரனை விநாயகர் அழித்த பின்னர், தேவர்கள் அவருக்குத் தோப்புக்கரணம் போட்டு நன்றி தெரிவித்தனர். அதனால் நாமும் அவரை மகிழ்விக்க அவ்வாறு செய்கிறோம். இதை அறிவியல் ரீதியாக அணுகும்போது, தோப்புக்கரணம் போடும்போது மூளையின் நரம்புகள் தூண்டப்படுவதாகவும், இது ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.
தலையில் குட்டிக் கொள்ளும் முறை :
விநாயகர் முன் தலையில் குட்டிக் கொள்வதற்கும் ஒரு புராணக் காரணம் உண்டு. அகத்தியர் தனது கமண்டலத்தில் இருந்த நீரை, உலக நன்மைக்காகக் காக உருவில் வந்த விநாயகர் கவிழ்த்தபோது, கோபமடைந்த அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். பின் உண்மை தெரிந்ததும் வருந்தினார். அதுபோல, நமக்குப் பல நன்மைகள் கிடைக்க வேண்டி, நாமும் தலையில் குட்டிக் கொண்டு வணங்குகிறோம்.
விநாயகருக்கு முன் எத்தனை முறை தலையில் குட்டிக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி பலரிடம் உண்டு. பொதுவாகப் பலர் 3 முறையோ, சிலரோ ஒரு முறையோ செய்கின்றனர். ஆனால், இதற்கு ஒரு முறையான வழிமுறை உள்ளது. மொத்தம் 5 முறை தலையில் குட்டிக் கொண்டு வணங்க வேண்டும் என்பதே சரியான முறையாகும்.
சரியான வழிபாட்டு மந்திரம் :
இந்த 5 முறை குட்டிக் கொள்ளும்போதும், ஒரு சிறப்பு மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே செய்வது முறையாம்.
“சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தய”
இந்த மந்திரத்தில் விநாயகரை வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் 5 வார்த்தைகளான (சுக்லாம் பரதர, விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜ, ப்ரஸந்ந வதநம்) ஒவ்வொன்றும் ஒரு குட்டைக் குறிக்கும். வலக்கையை இடக்கையின் முன் வைத்து, வலக்கையால் இடப்புறத்திலும், இடக்கையால் வலப்புறத்திலும் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்வதே சரியான வழிபாடாகும். இந்த முறையில் விதிப்படி வழிபட்டால் மட்டுமே விநாயகரை வழிபட்ட முழுப் பலனையும் பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
Read More : Alert: இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி…!



