உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பர்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரன்வீர் சிங். இவருக்கு முகேஷ், ரவீந்திரா என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டாவது மகன் ரவீந்திராவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஃபதேஹாபாத் பகுதியில் உள்ள ரன்வாய் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திராவின் மனைவி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த ரவீந்திரா, கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதியன்று, தனது மனைவியைச் சமாதானம் செய்து அழைத்து வர தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரது மாமியார் பூல்வதி, தனது மகளைத் திரும்ப அனுப்ப மறுத்துள்ளார். ஆனால் ரவீந்திரா மறுபடியும் கெஞ்சி அழைத்துள்ளார். அப்போது அவரது மாமியார், நீ உன் தாயை கொலை செய்து விட்டு வா, அப்போது தான் நான் எனது மகளை அனுப்புவேன் என்று கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், தனது சம்மந்தியை கொலை செய்வதற்கு ஒரு பாக்கெட் விஷத்தையும் ரவீந்திராவிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
மனைவி மீது இருந்த பாசத்தால், மாமியாரின் பேச்சைக் கேட்ட ரவீந்திரா, தனது தாயை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, தனது தாய் சாப்பிடுவதற்காக வைத்திருந்த கொண்டைக்கடலையில் தனது மாமியார் கொடுத்த விஷத்தைக் கலந்துள்ளார். அதனைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவரது தாயாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகனே தன்னை பெற்ற தாய்க்கு விஷம் கொடுத்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரவீந்திரா மீது பர்புரா பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மாமியார் பூல்வதியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



