ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இந்திரா தனது கணவர் தனசீலன் தன்னை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்திருந்தார். தனசீலன் தன்னுடைய மருமகளுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அதை கண்டித்ததால் தன்னை தாக்கி, உணவளிக்காமல், தனிமைப்படுத்திவிட்டதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் தனசீலனை 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தது. ஆனால் மேல்முறையீட்டில் அவர் குற்றமற்றவர் என மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது. இதனை எதிர்த்து இந்திரா மதுரை ஹைகோர்ட்டை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி வழங்கிய தீர்ப்பு தற்போது தமிழக முழுவதும் பேசப்படும் தலைப்பாகியுள்ளது.
நீதிபதி தனது தீர்ப்பில், “திருமணம் என்பது அடக்குமுறையைக் சகித்துக்கொள்வது அல்ல; பரஸ்பரம், மரியாதை, நட்பு, கருணை ஆகியவற்றில் நிலைநிற்கும் புனித உறவு. துன்புறுத்தலின் போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல, அது அடக்குமுறைக்கு அடிமை ஆவது. குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோர முடியாது. வயது அதிகமானவராக இருந்தால் பொறுப்பும் அதே அளவுக்கு அதிகமாகும்.
அவரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்கள் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலையும், அவமதிப்பையும் ஏற்படுத்தி உள்ளன. அவர் பல ஆண்டுகளாக அமைதியாகவே துன்பத்தை தாங்கியிருக்கிறார். எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றவும், குறைக்கவும் தேவையில்லை. குற்றவாளியை கைது செய்து மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கும் வகையில் சிறையில் அடைக்க வேண்டும்.
வீட்டுக்குள் நடக்கும் துன்புறுத்தல்களுக்கு நேரடி சாட்சி தேவையில்லை; சட்டம் அந்த முகமூடியை அகற்ற வேண்டும் என்றார். மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, கீழமை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத்தண்டனையும் ரூ.5,000 அபராதமும் நிலைநிறுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து 8 வாரங்களுக்குள்ளாக அறிக்கை அளிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.



