சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்த உஷா என்பவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ரோஜா என்ற ஒரு மகள் உள்ளனர். ரோஜாவை வெற்றிவேல் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா கணவரை பிரிந்து தனது தாயார் உஷாவின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, வெற்றிவேல் தொடர்ந்து குடித்துவிட்டு, மனைவி ரோஜாவை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வலியுறுத்தி, புளியந்தோப்புக்கு சென்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம் போலவே, நேற்று மாமியார் வீட்டுக்கு வந்த வெற்றிவேல், மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தபோது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வெற்றிவேல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவி ரோஜாவை வெட்ட முயன்றுள்ளார். அப்போது, தாயார் உஷா குறுக்கே வந்து மகளை தடுக்க முயன்றபோது, வெற்றிவேல் உஷாவின் இடது கையில் சரமாரியாக வெட்டினார்.
இந்த தாக்குதலில் உஷாவின் இடது கை மணிக்கட்டு உடைந்து அவர் வலியால் கதறியுள்ளார். அதன்பிறகும் ரோஜாவையும் சரமாரியாக தாக்கிய வெற்றிவேல், அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றுவிட்டார். பின்னர், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த உஷாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வெற்றிவேலை தேடி கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



