மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), என்பவர் காணாமல் போன வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகாத மணிகண்டன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு பாரதிராஜா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒன்றாகப் பணம் செலவழித்து, பல திருமணமான பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நெருங்கிய நட்புக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்படவே, அது கொடுக்கல் வாங்கல் மற்றும் தனிப்பட்ட பிரச்சனையாக மாறியது. மணிகண்டனிடம் தான் செலவழித்த பணத்தை திருப்பிக் கேட்டு பாரதிராஜா தகராறு செய்துள்ளார். இந்த மனக்கசப்பு நீடித்து வந்த நிலையில், மணிகண்டன் ரகசிய தொடர்பில் இருந்த ஒரு பெண்ணுடன் பாரதிராஜாவும் தொடர்பு வைத்திருந்தது மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பாரதிராஜாவை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பொது இடங்களில் கூட அவமானப்படுத்தி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பாரதிராஜா, மணிகண்டனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். அதன்படி, கடந்த நவம்பர் 7-ஆம் தேதி இரவு, பாரதிராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை மது அருந்த அழைத்துள்ளார். அருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்ற அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது, மீண்டும் அந்தப் பெண் விவகாரம் தொடர்பாக மணிகண்டன் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பாரதிராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாகத் தாக்கி, கொடூரமாகக் தலை துண்டித்துக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, பாரதிராஜா தனது நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து, மணிகண்டனின் உடலை மதுரை மாவட்டம் கூடக் கோவில் அருகே உள்ள கிராமத்தில் உள்ள தரைப்பாலம் ஒன்றின் அடியில் வீசி உள்ளனர்.
இதற்கிடையே, மணிகண்டனை காணவில்லை என தகவல் அறிந்த போலீசார், காணாமல் போன வழக்கை விசாரித்து வந்த நிலையில், தரைப்பாலம் அருகே உடல் இருப்பதை அறிந்து, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். ஆனால், அவரது தலை கிடைக்கவில்லை. தீவிர விசாரணைக்குப் பிறகு, போலீசார் பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான விக்னேஸ்வரன், மதன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், கொலைக்குப் பிறகு தலை துண்டிக்கப்பட்டு, அது தரைப்பாலம் அருகே கல்லைக் கொண்டு மூடப்பட்டதாக கொலையாளிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், உடல் வீசப்பட்ட பகுதியில் யாரும் துர்நாற்றம் அறியாமல் இருக்க, அங்கு கோழிக் கழிவுகளையும், இறந்துபோன நாய் ஒன்றையும் போட்டு மறைக்க முயன்றதும் அதிர்ச்சியில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



