“வேண்டாம் வேண்டாம்னு சொன்னமே”..!! டிரைவர் ரூபத்தில் வந்த எமன்..!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணம்..!!

MP 2026

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் சிலர், சாரங்பூர் அருகே உள்ள கட்னாவாட் கிராமத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்காக வேனில் புறப்பட்டுள்ளனர். இன்று காலையில் இந்த வேன் படானா பைபாஸ் பகுதிக்கு அருகே வந்தபோது, அப்பகுதியில் பெய்த கனமழையால் சீறிப்பாய்ந்து வந்த ஜிரி ஓடையின் நீர், சாலையை முழுமையாக மூழ்கடித்து வழிந்தோடிக் கொண்டிருந்தது.


அப்போது, வெள்ளப்பெருக்கு அதிகமாக உள்ளதால் வாகனத்தை இயக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து எச்சரித்துள்ளனர். அந்தப் பகுதியில் 30 அடி அகல பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்ததால் மாற்றுப் பாதைக்கான வழிகாட்டிப் பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத ஓட்டுநர், வேனை வெள்ளத்தில் இறக்கியுள்ளார். இதனால் சீறிப்பாய்ந்த நீரின் வேகத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் அடித்துச் செல்லப்பட்டது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினரும் அப்பகுதி பொதுமக்களும் கயிறுகள் மற்றும் கிரேன் உதவியுடன் வேனை வெளியே மீட்டனர். ஆனால், வெள்ளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த நேரில் பார்த்த சாட்சியான மகேந்திர பர்மர் கூறுகையில், “சாலை எது, ஓடை எதுவென்றே தெரியாத அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. தண்ணீரைக் கடக்க வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் ஓட்டுநர் அதனை கேட்கவில்லை” என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்த உதவிப் கோட்ட காவல் அதிகாரி அரவிந்த் சிங் மற்றும் சப்-டிவிஷனல் மெஜிஸ்ட்ரேட் ரோஹித் பாம்ஹோர், “கனமழை காரணமாக ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மாற்றுப் பாதைக்கான எச்சரிக்கைப் பலகைகள் இருந்தும் ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியதே இந்த துயரச் சம்பவத்திற்குக் காரணம். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

Read More : கரும்புக் காட்டுக்குள் கான்கிரீட் போட்டு நடந்த ஸ்டாலின்..!! வெச்சு செய்த அமைச்சர் ரமேஷ்..!! சட்டமன்றத்தில் சிரிப்பலை..!!

You May Like