அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோவில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே முழு பொறுப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
5000 பேருக்கு மேலும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ரோடு ஷோக்கள், கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையம் விதிக்கும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும் எனவும், இருப்பினும் கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர், கழிவறை வழங்குவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என்று அரசு தெரிவித்துள்ளது..
மேலும் 5000 பேருக்கும் குறைவான மக்கள் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது, ஆனால் தற்போதைய நடைமுறையை பின்பற்றி அனுமதி பெற வேண்டியது அவசியம்.. அரசியல் பொதுக்கூட்டம், ரோடு ஷோ, போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் ஆகியவை நடைபெறும் இடங்களை காவல்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார்..
பொதுக்கூட்டங்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள், ரோடு ஷோ நடத்தப்படுவதற்கு முன்பு, என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும்? பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்..
ரோடு ஷோவை நடத்தும் தலைவர்கள், தங்கள் பிரச்சாரத்தை தொடங்கும் இடம், முடிக்கும் இடம், பொதுக்கூட்டங்களை நடத்தும் இடத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.. இது மாதிரியான கூட்டங்களில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை, பொதுப்பணித்துறை பொறியாளர் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும்.. அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்..
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நடத்த சம்மந்தப்பட்ட துறையிடம் அனுமதி பெற வேண்டும்.. நிகழ்ச்சி நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.. 50,000 பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய மாநாடு போன்ற கூட்டங்களுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்க வேண்டும்..
முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ வசதி ஏற்பாடு செய்த விவரங்களை விண்ணப்பங்களில் தெரிவிக்க வேண்டும்.. நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோவில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே முழு பொறுப்பு.. கூட்டத்தின் போது தனியார் மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான செலவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே ஏற்க வேண்டும்.. நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்..
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு தேவையான அனைத்து வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே செய்ய வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



