சின்னத்திரை நடிகை மோனிஷா, தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த வேதனையான அனுபவங்களை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் (சீசன் 2), கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பச்சைக்கிளி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள மோனிஷா, தற்போது ஒளிபரப்பாகி வரும் Second Love நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் தனது கடந்தகால வாழ்க்கை குறித்து அவர் உருக்கமாக பேசியுள்ளார். மோனிஷா கூறியதன்படி, எட்டு ஆண்டுகள் நீடித்த தனது திருமண வாழ்க்கை நம்பிக்கை சிதைந்ததால் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் முழுமையாக நம்பிய வாழ்க்கைத்துணை, பின்னர் தேவையற்ற சந்தேகங்களால் தன்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி வீட்டின் தனிப்பட்ட இடங்களில்கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆடை மாற்றும் தருணங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட காட்சிகளும் ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் தனது கணவரின் நண்பர்கள் அந்த தனிப்பட்ட புகைப்படங்களை பார்த்ததாக கூறியபோதுதான் இந்த விஷயம் தெரியவந்ததாகவும், அந்த சம்பவம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் மோனிஷா பகிர்ந்துள்ளார்.
திருமண வாழ்க்கையின்போது நடிகையாக கிடைத்த வாய்ப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், தனது வருமானமும் தவறாக பயன்படுத்தப்பட்டதால் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விவாகரத்து பெற முடிவு செய்தபோது, தனது நகைகளை திருப்பித் தர முடியாது என்று முன்னாள் கணவர் கூறியதாகவும், அதனால் இழப்பை ஏற்றுக்கொண்டு விவாகரத்து பெற்றதாகவும் மோனிஷா தெரிவித்தார். நீதிமன்றத்தில் விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்திட்ட தருணம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நிம்மதியான தருணமாக இருந்ததாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.
அதேநேரத்தில், கடந்த அனுபவங்களின் தாக்கம் இன்னும் மனதில் நீங்கவில்லை என்றும், யாருடன் அருகில் இருந்தாலும் தன்னை யாராவது ரகசியமாக படம் அல்லது வீடியோ எடுக்கிறார்களோ என்ற பயம் இன்னும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோனிஷாவின் இந்த பகிர்வு நிகழ்ச்சியில் இருந்த மற்ற போட்டியாளர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து, இனி வரும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Also Read: “புருஷன கொன்னுடு… குழந்தைய தூக்கிட்டுப் போயிடலாம்!” நெஞ்சை பதறவைத்த பெண்ணின் திட்டம்!



