கனடா அரசு தனது குடியுரிமைச் சட்டத்தில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மசோதா C-3 என்ற சட்டத் திருத்தத்தின் மூலம், வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை வழங்கும் விதிகள் இப்போது எளிதாகிறது. இதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கனடாவில் வாழும் மக்கள்தொகையில் இந்தியர்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்பதால், இந்த மாற்றத்தின் நேரடி பயனாளிகள் இந்தியர்கள் ஆவார்கள்.
தற்போதைய சட்டத்தின்படி, கனடாவிற்கு வெளியே கனேடிய குடிமக்களுக்குப் பிறந்த குழந்தைகள் குடியுரிமை பெற அனுமதி இல்லை. 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த “முதல் தலைமுறை வரம்பு” பல வெளிநாட்டு குடும்பங்களை பாதித்தது. ஆனால், 2023 டிசம்பர் 19 அன்று ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இந்த கட்டுப்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யாமல், கனடா அரசு நேரடியாக இந்த தடையை நீக்கும் வகையில் மசோதா C-3-ஐ முன்வைத்தது.
மசோதா C-3 கொண்டுவரும் முக்கிய மாற்றங்கள்:
- வெளிநாட்டில் பிறந்த கனேடிய பெற்றோரின் குழந்தைகளும் கனேடிய குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள்.
- பழைய விதிகளின் காரணமாக குடியுரிமை இழந்தவர்களுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்படும்.
- குடியுரிமை வழங்க “கனடாவுடன் குறிப்பிடத்தக்க இணைப்பு” (significant connection) என்ற புதிய சோதனை அறிமுகப்படுத்தப்படும்.
- இது அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் விதிமுறைகளுக்கு ஒத்ததாக இருக்கும்.
இந்த மாற்றம் ஏன் அவசியம்? குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கமான CILA தெரிவித்ததாவது: பிறக்கப்போகும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக பல பெண்கள் பிரசவத்திற்காக மட்டும் கனடா செல்ல வேண்டிய நிலை உருவானது. இந்த அநியாயத்தை முற்றிலும் அகற்றுவதே இந்த புதிய சட்டத்தின் நோக்கம்.
மசோதா ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அமல்படுத்தப்படும் சரியான தேதியை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Read more: விவசாய கழிவுகள், கல்லில் இருந்து காகிதத்தை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்..!! ஸ்பெஷல் என்ன தெரியுமா..?



