இணையக் குற்றங்கள், நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வங்கிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. சந்தேகத்திற்கிடமான வாடிக்கையாளர் கணக்குகளை முன் அறிவிப்பின்றி தற்காலிகமாக முடக்க வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கும் அதே நேரத்தில், அந்த அதிகாரம் தன்னிச்சையாகவும் அநியாயமாகவும் பயன்படுத்தப்படாமல் இருக்க தெளிவான கட்டுப்பாடுகளையும் நீதிமன்றம் வகுத்துள்ளது.
தென்னிந்திய வங்கியின் இரண்டு கணக்குதாரர்கள் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.ஏ. அப்துல் ஹக்கீம், இந்தத் தீர்ப்பை வழங்கினார். அறிவிக்கப்பட்ட வருமானத்துடன் பொருந்தாத அசாதாரண பரிவர்த்தனைகள் காரணமாக கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக வங்கி விளக்கம் அளித்தது. கணக்குதாரர்கள், தங்களின் வணிகம் சட்டப்பூர்வமானது என்றும், எந்த நீதிமன்ற அல்லது காவல் துறை உத்தரவும் இன்றி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது தன்னிச்சையான செயல் என்றும் வாதிட்டனர்.
இந்தச் சூழலில், வாடிக்கையாளர் உரிமை மட்டும் அல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த நிதி பாதுகாப்பும் முக்கியம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. கணக்குகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது வங்கிகளின் கடமை என்றும், நியாயமான சந்தேகம் இருந்தும் வங்கிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், அது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவாக அமையும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
நீதிமன்றத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள்:
* சந்தேகத்திற்கிடமான அல்லது அசாதாரண பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால், முன்கூட்டிய அறிவிப்பு இன்றி உடனடியாக டெபிட் பரிவர்த்தனைகளை வங்கி நிறுத்தலாம்.
* அதே நாளில் எஸ்எம்எஸ் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் கணக்குதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
* உள்ளூர் இணையக் குற்றவியல் காவல் துறைக்கும் அறிவிக்கப்பட வேண்டும். கணக்குதாரருக்கு தங்களின் செயற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் உரிமை உண்டு.
* அந்த விளக்கத்தை வங்கி ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்.விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால், மூன்று மாதங்கள் வரை கணக்கு முடக்கம் தொடரலாம்.
* இந்த காலத்தில் சட்ட அமலாக்கத் துறைகளால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாவிட்டால், முடக்கத்தை நீக்கி வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும். வங்கியின் முடிவு நியாயமற்றது எனக் கருதினால், நீதிமன்றத்தை அணுக கணக்குதாரருக்கு முழு உரிமை உண்டு.



