அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை செங்கோட்டையன் வழங்கினார்..
ஆனால் திமுக உடனும் கடந்த 3 மாதங்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.. இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த போது, சபாநாயகர் அறையில் அமைச்சர் சேகர் பாபு இருந்ததாக கூறப்படுகிறது.. அப்போது சேகர் பாபுவும் செங்கோட்டையனும் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது..
இதனிடையே செங்கோட்டையன் ராஜினாமா செய்துள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் சற்று நேரத்திற்கு முன்பு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.. சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். செங்கோட்டையனை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் விஜய்யின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தவெகவில் இணையும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது..
இந்த நிலையில் இன்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் சென்றார்.. இன்று காலை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று மாலை விஜய்யை அவரின் வீட்டில் சந்தித்து பேசினார்.. தவெகவில் அவர் இணைய உள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..
தவெகவின் மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.. மேலும் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான அதிகாரம் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More : செங்கோட்டையனுக்கு தவெகவில் வெயிட்டான பதவி.. விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவு!



