சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பினை உடனுக்குடன் கண்டறியும் வகையில் இணைய வழியில் உள் தணிக்கை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பதிவுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; பதிவுத்துறையால் ஆவணப்பதிவு உள்ளிட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சேவைகளும் முழுமையாக கணினி மூலம் இணைய வழி பயன்பாட்டிற்கு கொண்டு வர STAR 2.0 Module. 13.02.2018 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மென்பொருள் வழியாக பொதுமக்களுக்கான ஆவணப்பதிவு, வில்லங்கச்சான்று, ஆவண நகல், திருமணப்பதிவுகள் சேவைகளும் தற்போது முழுமையாக இணையவழி செயல்பாட்டில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக சார்பதிவக பதிவுப்பணிகளில் பதிவு நடைமுறை மற்றும் அரசு வருவாய் குறித்தான உள்தணிக்கை (Local Audit) பணியினை விரைவுபடுத்திடவும். பொதுமக்கள் சேவை குறைபாட்டினை நீக்கிடவும், பதிவு நடைமுறை தவறுகள் மற்றும் அரசுக்கான வருவாய் இழப்பினை உடனடியாக கண்டறிந்து உடனுக்குடன் இழப்பு குறித்து உரிய கால கெடுவுக்குள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு இழப்பினை வசூலித்திட ஏதுவாகவும் சார்பதிவக உள்தணிக்கை பணிகளை இணையவழி நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மாவட்ட பதிவாளர்கள் (தணிக்கை) மற்றும் (நிர்வாகம்) / தணிக்கை குழுவினர் மற்றும் பதிவு அலுவலர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக “STAR 2.0 Audit Module” மென்பொருள் உருவாக்கப்பட்டு அனைத்து உள்தணிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், இதுதொடர்பாக உரிய அலுவலர்களுக்கும். பணியாளர்களுக்கும் தொடர்ந்து பயிற்சியும் அளிக்கப்பட்டுவருகிறது. மேற்குறிப்பிடும் நடவடிக்கையில் “Audit Module” மென்பொருளில் சிறு நடைமுறை பிரச்சனைகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



